யாழில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளில் பாடசாலைகள்,விவசாய நிலங்கள் பல உள்ளடங்குகின்றன-அங்கஜன் எம்.பி.

சாவகச்சேரி நிருபர்
யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடம் இருந்து விடுவிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ள 3027 ஏக்கர் நிலப்பரப்பில் பாடசாலைக் கட்டடங்கள்,முக்கிய வீதிகள் மற்றும் மக்களின் விவசாய நிலங்கள் பல உள்ளடங்குவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
02/12 வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
எமது மக்களின் நீண்ட காலப் பிரச்சனையாக காணிப் பிரச்சனை காணப்படுகிறது.
எமது மக்களின் பூர்வீக நிலங்கள் பல திணைக்களங்களால் பல வடிவங்களில் ஏதோ ஓர் நிகழ்ச்சி நிரலின் கீழ் சூறையாடப்பட்டிருக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட காணிகளில் இதுவரை 20,832ஏக்கர் காணிகள் பல கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்னமும் 3027ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டிய தேவைப்பாட்டில் உள்ள போதிலும் அதில் பல முக்கிய கட்டிடங்கள்,வீதிகள்,பாடசாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடங்குகின்றன.
யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய வீதிகளாக தெள்ளிப்பளை-அச்சுவேலி வீதியின் கட்டுவன் சந்தி தொடக்கம் வசாவிளான் வரையான வீதி,
பலாலி வீதியின் வசாவிளான் மகா வித்தியாலயம் தொடக்கம் பலாலி சந்தி வரையான பகுதி,கே.கே.எஸ் -கீரிமலை வீதி,பலாலி வீதி ஆகிய முக்கிய வீதிகளை விடுவிக்க வேண்டிய தேவை நிலவுகிறது.
அத்துடன் வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம்,மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை,கே.கே.எஸ் மகா வித்தியாலயம்,கே.கே.எஸ் ஆர்.சி வித்தியாலயம்,பலாலி சித்தி விநாயகர் வித்தியாலயம்,பலாலி அ.த.க பாடசாலை கட்டடம் ஆகியவற்றை பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறான முக்கியமான தேவைப்பாடுடைய காணிகளை விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு நிலவுகின்றது.இருப்பினும் இதுவரை விடுவிக்கபாடாது உள்ள 3027 ஏக்கர் நிலப்பரப்பில் 1617 ஏக்கர் காணியை காணி அமைச்சின் ஊடாக இராணுவத்தினருக்கு சுவீகரிக்கும் நடவடிக்கை ஒன்று இடம்பெறுவதாகவும் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.