தேர்தலை நடத்த அஞ்சும் அரசாங்கம் – சம்பிக்க ரணவக்க வெளியிட்ட தகவல்
இலங்கை மக்களின் ஆணையை சிறிலங்கா பொதுஜன பெரமுன இழந்துள்ளதை அறிந்தே அரசாங்கம் தேர்தலை நடத்த அஞ்சுவதாக 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடந்த காலங்களில் இருந்த மக்கள் ஆணை தற்போது இல்லாததால் நாட்டில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அவர்கள் தோல்வியை எதிர்நோக்க நேரிடும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை யாருக்கு இருக்கிறது
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை மக்களின் தற்போதைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள நாட்டில் கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்திய போது மக்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பெருமளவில் ஆதரவளிக்கிறார்கள் என்பது தெரிய வந்திருந்தாலும் தற்போது அந்த மக்கள் ஆணை அவர்களிடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படாது உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் மாத்திரமே மக்கள் ஆணை யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை