சட்டவிரோத மாட்டுவண்டி ஓட்டப்பந்தயம்! 5 பேர் கைது – தென்னிலங்கையில் சம்பவம்
களுத்துறை – பண்டாரகம பிரதான வீதியில் சட்டவிரோதமாக ரேக்ளா மாட்டு வண்டி ஓட்டப்பந்தயதில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஓட்டப்பந்தயத்திற்கு பயன்படுத்தப்பட்ட 5 ரேக்ளா மாட்டு வண்டிகள் மற்றும் 5 மாடுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பொது மக்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மொரான்துடுவ காவல்துறையினர், இன்று (4) காலை கோனதுவ பிரதேசத்தில் இவர்களை கைது செய்துள்ளனர்.
விலங்கு வதை
எவ்வித அனுமதிகளையும் பெறாது, பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் பிரதான வீதியை பயன்படுத்தி இவர்கள் மாட்டு வண்டி ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் பண்டாரகம மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் வசிக்கும் 25 முதல் 35 வயதான நபர்கள் என தெரியவருகிறது.
விலங்கு வதை, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்தமை, வீதி சட்டத்திட்டங்களை மீறியமை மற்றும் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்று பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை