கோட்டாபயவால் நாட்டிற்கு ஏற்பட்ட பல பில்லியன் நட்டம் – பட்டியலிட்ட உறுப்பினர்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தவறான தீர்மானத்தினால் நாட்டின் வருமானத்தில் 600 தொடக்கம் 700 பில்லியன் வரை இழக்க நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
“அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட பிழையான தீர்மானங்களால் இழந்த நாட்டின் வருமானங்களை மீள பெற்றுக்கொள்ளவே வற்வரி மற்றும் வருமான வரியை அதிகரிக்க தீர்மானித்திருக்கின்றது.வற்வரி குறைக்க கோட்டாபய ராஜபக்ச எடுத்த பிழையான தீர்மானத்தால் நாட்டின் வருமானம் 600 தொடக்கம் 700பில்லியன் வரை இழக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசாங்கம் மேற்கொண்ட பிழையான கொடுக்கல் வாங்கல் காரணமாகவும் பாரியளவில் நாட்டின் வருமானத்தை இல்லாமலாக்கிக்கொண்டது.
அதேநேரம் நட்டமும் ஏற்பட்டது. அத்துடன் சீனாவில் இருந்து உரம் கொண்டுவருவதற்காக சுமார் 6.9 பில்லியன் டொலர் சீன நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கி இருந்தது. மீண்டும் உரம் அனுப்புவதென்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே இதனை செலுத்தினோம்.
ஆனால் மீண்டும் உரம் வரவும் இல்லை. நாங்கள் அவர்களிடம் பெற்ற வங்கி உத்தரவாதத்துக்கு 5மில்லியன் டொலர் செலுத்த வேண்டி ஏற்பட்டது. அதேபோன்று எமது அரசாங்கத்தில் ஜப்பான் நாட்டுடன் ஒப்பந்தம் செய்திருந்த இலகு ரயில் சேவையை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததுடன் இரத்துச்செய்தது.
அதனால் எமக்கு ஏற்பட்ட நட்டம் 597 கோடி ரூபா என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று ஒப்பந்தத்தை இரத்துச்செய்ததால் ஜப்பான் நிறுவனத்துக்கு 516கோடி நட்ட ஈடு செலுத்த வேண்டி ஏற்பட்டது.
இவ்வாறு இவ்வாறுதான் அரச வருமானம் இல்லாமல் போனது. அரசாங்கம் இவ்வாறு நாட்டின் வருமானங்களை இல்லாமலாக்கிவிட்டு, மக்களிடம் அதனை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
அதற்காகத்தான் தற்போது மின்சார கட்டணத்தை இரண்டாவது முறையும் அதிகரி்க்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. வற்வரியை நூற்றுக்கு 15வீதத்துக்கு அதிகரித்திருக்கின்றது. எமது மாதாந்த வருமான வரியை நூற்றுக்கு 36வீதம் வரை அதிகரித்திருக்கின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் எவ்வாறு இதனை தாங்கிக்கொள்வது? கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான பிழையான தீர்மானங்களுக்கு பொறுப்புக்கூற இன்று யாரும் இல்லை.
அதனால் இதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், எமது நாட்டில் பொருளாதா மோசடி இடம்பெற்றுள்ளது என மனித உரிமை பேரவையும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. அதனால் அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மக்களை அர்ப்பணிக்குமாறு அதிபர் தெரிவிக்கிறார். ஆனால் அந்த அர்ப்பணிப்பு அரசாங்கத்திடம் இல்லை. வரவு செலவு முடிந்தவுடன் அரசாங்கம் மேலும் அமைச்சுப்பதவிகளை அதிகரித்துக்கொள்ள முயற்சித்திருக்கின்றது.
இவ்வாறு இருக்கையில் மக்களுக்கு இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாமல் போயிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை