ஜனாதிபதி அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இன்று சந்திக்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்த தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்த சந்திப்பு தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒற்றை ஆட்சியை கைவிட்டு சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி உறுதியளிக்காமல் பேச்சுவார்த்தைக்கு செல்லப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அண்மையில் தனித்தனியாக ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.