விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் – கூட்டமைப்பிற்குள் மூண்டது சொற் போர்; சுமந்திரனுக்கு பதிலடி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள் எமது கட்சியின் முடிவுகளே.
அவை ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல எனத் தெரிவித்த புளொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். அந்தக் கட்டமைப்பில் செயற்பட விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு பதில் வழங்கியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்து சந்திக்க மேற்கொள்ளும் எத்தனங்கள் பற்றியும், கூட்டமைப்பை விட்டு எந்த தரப்பு பிரிந்து சென்றாலும், நாங்கள் கூட்டமைப்பாக செயற்படுவோம் எனவும் அண்மையில் கஜதீபன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் அதிக வட்டாரங்களை வெல்ல தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதாகவும், பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடியதாகவும், கஜதீபன் விடயம் தெரியாமல் கதைக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் கஜதீபன் பதில் வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவர் சாதாரண அரசியல்வாதியாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவர் சித்தார்த்தன். அவர் தான் எமது கட்சி தலைவர்.
ஆனபடியால், ஒரு ஆசனம் அங்கு கிடைக்கும், ஒரு ஆசனம் இங்கு கிடைக்கும் என மக்களின் நம்பிக்கையை பெற்று, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இவ்வளவு காலமாக வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு செல்ல முடியாது.
நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். இந்த கட்டமைப்பில் விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம். எனக்கு தெரியாமல் நான் கதைக்கவில்லை. எமது கட்சி தலைவர் சித்தார்த்தனிற்கு அரசியல் ரீதியாக என்ன விடயம் தெரிந்தாலும், நான் உட்பட கட்சியிலுள்ள எல்லா முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடுவார்.
தனித்து போட்டியிடுவது பற்றி சுமந்திரன் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, நான் சித்தார்த்தனின் வீட்டுக்கு சென்றேன். கட்சியின் முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் இதைப்பற்றி கலந்துரையாடினோம்.
ஒரு சில தேர்தல் ஆதாயங்களிற்காக கட்டமைப்பை உடைக்க முடியாது. அடிமட்ட மக்களை குழப்பமடைய வைத்து விட்டு, மீண்டும் ஒன்று சேர்த்து செயற்படுவது சாத்தியமற்றது. நாங்கள் விரிவாக இன்னொரு விடயத்தையும் ஆராய்ந்தோம்.
2018 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 30 வீதமான வாக்குகளைத்தான் பெற்றோம். நாங்கள் 50 வீதத்திற்கு அதிக வாக்குகளை பெற்றிருந்தால், சபைகளில் நெருக்கடியில்லாமல் ஆட்சியமைத்திருக்கலாம்.
அப்படியான பொறிமுறையை உருவாக்க நாங்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். வாக்கு குறைந்ததற்கு என்ன காரணமென்பதை ஆராயாமல், வெறுமனே தொழில்நுட்ப ரீதியிலான காரணங்கள் என கூறி, தொழில்நுட்பத்தின் மீது பழியை போட்டு விட்டு நாங்கள் வேலை செய்ய முடியாது.
நாங்கள் தேசியரீதியாக தேர்தல் முறையை மாற்ற வேலை செய்ய வேண்டும். அடிமட்டத்தில் இன்னமும் பலமான அடித்தளத்தை உருவாக்கி, மற்ற தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்து செயற்பட வேண்டும்.
ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பி தனித்து ஆட்சியமைத்ததைப் போல, பூநகரியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்த உதாரணங்கள் உள்ளன. நாங்கள் ஏனைய இடங்களிலும் தனித்து ஆட்சியமைக்கலாம்.
பல வட்டாரங்களில் ஒன்று இரண்டு வாக்குகளால்தான் வெற்றியடைந்துள்ளோம். சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை கூறிக்கொண்டு, சமூகத்தை தவறாக வழிநடத்திக் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு சென்றதே துரோகம் என கூறிக்கொண்டுள்ள தரப்புக்களை வளர்த்து விடும் ஏற்பாடுகளையே நாம் செய்யப் போகிறோம்.
அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் கட்சிகளும் வளர்ந்து விடும். நாம் அப்படி செயற்பட முடியாது. எங்களிற்கு பெரிய எதிர்பார்ப்புக்களில்லை. யாழ் மாவட்டத்தில் எமக்கு இரண்டு எம்.பிக்கள். கிளிநொச்சியை மையப்படுத்தி சிறிதரன் வாக்கெடுக்கிறார் என்றால், யாழ்ப்பாணத்தில் சித்தார்த்தனும், சுமந்திரனும் 2 பேர் தான்.
ஆனால் எமக்குள்ள பிரதேசசபை ஒன்று மட்டும்தான். சில வேளை நாம் இழக்கலாம். அல்லது இன்னும் பலவற்றை கைப்பற்றலாம். அதனால் எமக்கு பெரிய எதிர்பார்ப்புக்களில்லை.
ஒற்றுமையை குலைக்கும் தவறான முன்னுதாரணங்களை அடுத்த தலைமுறைக்கு காண்பிக்கக்கூடாதென்பதற்காகவே, இப்படியான முன்மொழிவுகளை எதிர்க்கிறோம்.
எமது ஆட்களை பதவியில் இருத்த வேண்டுமென்பதாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல. நான் அறிவித்தது கட்சியின் முடிவுதான். நாங்கள் கட்சியாக ஆராய்ந்த பின்னரே அதன் முடிவை அறிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை