பாகிஸ்தான் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்கள்
கராச்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் குவித்த 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் பாகிஸ்தான் சார்பாக இருவர் சதம் குவித்ததுடன் ஒருவர் அரைச் சதம் குவித்தார். நியூஸிலாந்து சார்பாக ஆரம்ப வீரர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் அரைச் சதம் பெற்றுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையில் திங்கட்கிழமை ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 438 ஒட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தானின் 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் பாபர் அஸாமும் சர்ப்ராஸ் அஹ்மதுவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 196 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். (306 – 5 விக்.)
சர்ப்ராஸ் அஹ்மத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 86 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து பாபர் அஸாம் 161 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இது அவரது 9ஆவது டெஸ்ட் சதம் ஆகும். 280 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அஸாம் 15 பவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் விளாசியிருந்தார்.
அதன் பின்னர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்த அகா சல்மான் 103 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் 7ஆவது விக்கெட்டில் நவ்மான் அலியுடன் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார். நவ்மான் அலி வெறும் 7 ஓட்டங்களையே பெற்றார்.
அகா சல்மான் 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பாகிஸ்தானின் 9ஆவது விக்கெட் சரிந்தது. இதன் காரணமாக அவர் சதத்தை எட்டுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், கடைசி துடுப்பாட்ட வீரருடன் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடிய சல்மான் சதத்தைப் பூர்த்தி செய்து சக வீரர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.
அவர் கடைசி வீரராக ஆட்டமிழந்தார்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் டிம் சௌதீ 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ப்றேஸ்வெல் 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஜாஸ் பட்டேல் 112 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டொம் லெதம் 78 ஓட்டங்களுடனும் டெவன் கொன்வே 82 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை