ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் ஓய்வு!
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி டிசம்பர் 31-ம் திகதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களில் பாதுகாப்பு பிரிவு, கூட்டுத்தாபனங்கள், சபைகள் என அனைத்து நிறுவன ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரச சேவையை கொண்டு செல்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரச சேவையை கொண்டு செல்வதுடன் அரச சேவை மீள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அத்தியாவசிய விடயங்கள் இருப்பின் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் ஊடாக அவ்வாறான பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, ஓய்வு பெறும் 30,000 பேரின் சம்பளத்தில் 85 வீதத்தை அரசாங்கம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சுமையை குறைத்து வழங்க சகல வழிகளிலும் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாண அரச சேவையில் கணக்கீடு செய்யப்படாத சாரதிகள் இன்றி அதிகளவான வாகனங்கள் உள்ளூராட்சி சபைகளில் காணப்படுவதாகவும், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை