91 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சூர்யகுமார் யாதவ் 112 ஓட்டங்களையும், சுப்மன் கில் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி சூர்யகுமார் யாதவ் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும்.
இந்திய அணி 3 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இசான் கிசான் ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த வேளையில் தில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சுக்கு தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.
இதனையடுத்து, களமிறங்கிய ராகுல் திரிபாதி அணிக்காக அதிரடியாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 16 பந்துகளுக்கு முகங்கொடுத்து 5 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், இந்திய அணி 52 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ராகுல் திரிபாதி சாமிக்ககருணாரத்னவின் பந்துவீச்சில் தில்ஷான் மதுஷங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.
இதனையடுத்து, 3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வந்தனர்.
இவர்கள் இணைப்பாட்டமாக 112 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில், இந்திய அணி 163 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சுப்மன் கில் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.
இவர் மகீஸ் தீக்ஷனவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய அணி 189 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தீபக் வூடா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து
சென்றார்.
இவர் தில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சுக்கு வனிந்து ஹசரங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 55 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும், கசுன் ராஜித 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 05 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில்,229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக தசுன் சானக்க 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி 41 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.
இவர் அக்ஷர் படேலின் பந்துவீச்சில் உம்ரான் மாலிக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.
இதனையடுத்து, இலங்கை அணி 44 ஓட்டங்களை பெற்றிருந்த போது பெத்தும் நிஸ்ஸங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் சிவம் மாவியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து இலங்கை அணி 51 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அவிஷ்க பெர்னாண்டோ ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
பாண்டியாவின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கிடம் பிடிகொடுத்து இவர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்க 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்போது, இலங்கை அணி 84 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனையடுத்து இலங்கை அணி 96 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்தநிலையில் இலங்கை அணி 107 ஓட்டங்களை பெற்றிருந்த போது வனிந்து ஹசரங்க 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இலங்கை அணி 123 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அந்த அணியின் 7ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.
சாமிக்க கருணாரத்ன ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார்.
இதனையடுத்து மகீஸ் தீக்ஷன 2 ஓட்டங்களுடனும், தசுன் சானக்க 23 ஓட்டங்களுடனும் தில்ஷான் மதுஸங்க ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின், ஹார்டிக் பாண்டியா 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், உம்ரான் மாலிக் 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், யுஸ்வேந்திர சஹால் 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 13 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2 – 1 என்ற அடிப்படையில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.