தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்க செயலாளர் ஹரிகரன் கோரிக்கை

எமது தமிழ் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்தேசங்களில் வாழும் ஈழத் தமிழ் நன்கொடையாளர்கள் அங்கு வியர்வைசிந்தி உழைக்கின்ற பணங்களை, தம் உறவுகளின் உயிர்காப்புக்காக சுகாதாரத் துறைக்கு வழங்குகின்றபோது அதனை நேரடியாக எமது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு ஆற்றவேண்டும்.

– இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் லயன் சி.ஹரிகரன்.

கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் ஊடாக ஒருகோடி ரூபா பெறுமதியிலான மருந்துகளை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சையாளர்களுக்காக வழங்கும் நிகழ்வு(20/12/2022) (செவ்வாய்க்கிழமை) ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தவை வருமாறு –

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுஐகன் அவர்கள் முதலில் ஊடகங்கள் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாகத்தான் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் மருந்துத் தேவை – குறிப்பாக புற்றுநோயாளர்கள் படும் அவலம் – வைத்தியர்கள் படும் சிரமம் – உலகளவில் உணரப்பட்டது. அதற்காக எமது வைத்தியசாலை நோயாளர்கள் சார்பில் முதற்கண் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

புலம் பெயர் எமது ஈழ உறவுகள் எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாகப் பல்வேறுபட்ட உதவிகளை – பல கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உதவிகளை – வழங்குகின்றார்கள். அவர்கள் ஒட்டுமொத்தமாக ‘இலங்கை மக்கள்’ என்று உணர்ந்து வழங்கும்போது – அந்த மருந்துகள் இலங்கை முழுத்தீவுக்கும் என்று சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கும்போது – பாரிய நிதி உதவியை எமது ஈழத்தமிழ் உறவுகள் வழங்கியிருந்தாலும், அதில் சிறுதுளிதான் எமது வடக்குக் கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு – அதிலும் எமது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை போன்ற சிறிய வைத்தியசாலையாக இருந்து அளப்பெரும் நோயாளர் சேவை ஆற்றுகின்ற வைத்தியசாலைகளுக்கு – கிடைக்கின்றன. காரணம், புற்றுநோயாளர்களுக்கு என சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்படும் மருந்துகள் மஹரகம, காலி கராப்பிட்டிய, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை என்று பங்கீடு செய்கின்றபோது, வைத்தியசாலைகளில் பதிவாகின்ற நோயாளர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே மருந்துகள் பங்கீடு செய்யப்படுகின்றன. மஹரகம, கராப்பிட்டியவை விட தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் அனுமதித் தரவுகள் மிகவும் குறைவானவை. ஆனால், ஒட்டுமொத்த வடக்குக் கிழக்கு மக்களுக்கும் அதனையும் தாண்டி அநுராதபுரம், புத்தளம், சிலாபம் போன்ற பிரதேச நோயாளர்களும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றார்கள். ஆனால், அமைச்சின் ஊடாகக் கிடைக்கப்பெறுகின்ற மருந்துகள் எமக்குப் போதுமானவையாக இல்லை.

கனேடிய தமிழ் காங்கிரஸ் எமது ஈழத்தமிழர்களிடம் நடைபயணம் ஊடாகப் பெற்ற மருந்துகளை வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு நேரடியாகத் தமது பிரதிநிதியாகிய சிவம் வேலாயுதத்தை அனுப்பி வழங்கியுள்ளமை மகிழ்வைத் தருகின்றது. அதற்காக அவர்கள் தென்னிலங்கையைக் கைவிடவில்லை. 6 வைத்தியசாலைகளுக்கு வழங்குகிறார்கள். அதில் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற தெற்கு, மேல் மாகாணங்களும் அடங்குகின்றன. இது பிரிவினையற்ற அவர்களின் பரந்துபட்ட சேவை நோக்கைக் காட்டுகின்றது.

ஆறு.திருழுருகன் ஐயா அவர்களின் வார்த்தைகள் சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படுபவவை. காத்திரமானவை. அவற்றை உணர்ந்து தற்போது லயன்ஸ் கழகங்கள், றோட்டரிக் கழகங்கள், இந்து அமைப்புகள், தனிநபர்கள் எனப் பலரும் தம்மால் முடிந்த சேவைகளை நோயாளர்களுக்கு வழங்குகின்றன. இதேநேரம், இன்னொரு விடயத்தையும் இந்தக் கொடை வள்ளல்களும் புலம்பெயர் தேசத்தவர்களும் உணரவேண்டும். புற்றுநோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை, அவசர சிகிச்சை என்றால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக்கூடமும் அவசர சிகிச்சைப் பிரிவும்தான் சேவையாற்ற வேண்டும். ஆகவே, அந்தப் பிரிவுகளில் – அதுவும் சத்திரசிகிச்சைக் கூடத்தில் – ஒரு பிளாஸ்டர்கூட இல்லாத துர்ப்பாக்கிய நிலைமைகூடக் காணப்படுகின்றது.

தெற்கிலுள்ள தேசிய வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை, கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலைகளிலும்கூட பனடோல், பரசிற்றமோல், மெட்போமின், இன்சுலின் போன்ற மருந்துகள் இல்லை. அந்த வைத்தியசாலைகளும் நன்கொடையாளர்களை நம்பித்தான் வைத்தியசேவையை வழங்குகின்றார்கள். ஆனால், தெற்கில் எத்தனையோ மிகப்பெரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் உள்ளார்கள். அவர்கள் அந்தத் தேவையைத் தாராளமாகப் பூர்த்திசெய்வார்கள். ஆனால், எமது வடக்குக் கிழக்கில் அவ்வாறில்லை. எமக்கு பெருமளவில் உதவக்கூடிய கொடையாளர்கள் எமது புலம்பெயர் தேசத்தவர்கள் மட்டுமே. அவர்கள்தான் எமது மக்களின் உயிர்காக்கும் உன்னத பணியை ஆற்றவேண்டும். – என்றார்.

வைத்தியசாலை திட்டமிடல் மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர் ஜதுனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடா தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி சிவம் வேலாயுதம், சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியகலாநிதி சுரேந்திரகுமார் ஆகிளோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.