பிரதி சபாநாயகரின் காணியில் கஞ்சா தோட்டம்
பிரதி சபாநாயகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் காணியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபரொருவர் கஞ்சா தோட்டத்தை நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகருக்கு சொந்தமானதாக கூறப்படும் மத்தல பெப்பர்கமத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் சுமார் 10 ஏக்கர் சூரியவெவ பிரதேச சந்தேக நபருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வளரும் காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் இடையில் இந்த கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சுமார் இரண்டரை ஏக்கர் காணியில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சா செடி ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கதிர்காமம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சில கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், எஞ்சியிருந்த கஞ்சா செடிகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை