தேர்தலின் பெறுபேறுகள் தமிழர்களுடைய சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் – சிறிதரன்
இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான கட்டுப்பணத்தை நாம் நேற்று செலுத்தியுள்ளோம். கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணம் நேற்று கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக எனக்கு தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், நாடாளுமன்ற குழுவிற்கும் இரா சம்பந்தனே தலைமை வகித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் நாடாளுமன்றத்திலும், சர்வதேச சமூகத்திலும் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே இது ஒரு உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள். இந்த தேர்தலின் வடிவம், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தெரிவு செய்யவுள்ளனர்.
அதற்கான கள பரீட்சையாக பார்க்கலாம். இதில் சாதக பாதக நிலை ஏற்படலாம். இன்று வெளியான செய்திகளினடிப்படையில், எமது தலைவர் ஓர் இரு நாட்களில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்த உள்ளதாக அறிய முடிகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஏன் தனித்தனியாக போட்டியிட வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது தொடர்பில் அவர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
ஆகவே பொறுப்பு வாய்ந்த கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், அவருடைய அறிக்கை வரும்வரை பொறுமையோடும், நிதானத்தோடும் இந்த விடயங்களை கையாள்வதே பொருத்தம் என தான் கருதுவதாக தெரிவித்தார்.
இதனால் எந்த பாதாமும் தமிழ் மக்களுக்கு வராது. கடந்த காலங்களில் நாங்கள் ஓர் இலக்கை நோக்கி நகர்ந்திருக்கிறோம். அக்காலகட்டத்தில் இலங்கை அரசோடும், இந்திய இராணுவத்தோடும் சிலர் சென்றிருந்தனர்.
இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இங்கு நாங்கள் பிழை பிடிப்பது நோக்கமல்ல. அல்லது யார்மீதும் குற்றம் சுமத்துவதும் நோக்கமல்ல. தனிநாட்டு கனவோடு பயணித்த நாங்கள் யுத்தம் முடிவுற்ற பின்பும் அதே கனவோடு ஒரே அணியாக பயணித்தோம். ஆனால் ஒற்றுமையாக செல்ல முடியாத மனதை நெருடுகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பா தம் தன் கட்சிகளை வளர்க்கின்ற செயற்பாடுகள் நெருக்கடிகளை தந்தது. அவற்றை சீர்செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.
அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த தேர்தல் புதிய ஒழுங்கு முறையை உருவாக்கும். இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என்று நம்புகிறேன்.
இப்பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. அது உடைந்துபோய் இருப்பதாக கருதி அதனை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்காக செல்ல முடியும்.
செய்திகளின் பிரகாரம், ஏனைய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவே அறிய முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் ஒன்றாகவே உள்ளது.
நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே சென்றிருக்கிறார்கள். அவ்வாறான வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.
இது ஒரு உள்ளுராட்சி மன்ற தேர்தல். அதில் போட்டியிடுவதற்காகவே தனித்து நிற்கின்றார்கள். இந்த பெறுபேறுகள் வந்த பின்னர், எல்லோருக்கும் நல்ல பாடம் கிடைக்கும். அந்த பாடத்தை சரியாக கற்றுக்கொண்டு, அதனடிப்படையில் பயணத்தை தொடரலாம் என்று நான் நினைக்கின்றேன்” என்றார்.
கருத்துக்களேதுமில்லை