இந்தியாவிடம் படுமோசமாக தோல்வியுற்ற நியூசிலாந்து!
ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (சனிக்கிழமை) ராய்ப்பூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
ஆனால், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. முதல் 15 ஓட்டங்களில் நியூசிலாந்து அணியின் முதல் 5 வீரர்களான டேவான் கான்வே, பின் ஆலென், நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், லதாம் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 100 ஓட்டங்களையாவது கடக்குமா என்ற பரிதாப நிலைக்கு சென்றது. அடுத்து வந்த பிலிப்ஸ் 36 ஓட்டங்கள், பிரேஸ்வெல் 22 ஓட்டங்கள், சாண்ட்னெர் 27 ஓட்டங்கள் அடிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை 100-ஐ தொட்டது.
இறுதியில் அந்த அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.
இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகள் மற்றும் முகமது சிராஜ், ஷர்தூள் தாக்கூர், குலதீப் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 109 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த நிலையில் ரோஹித் 51 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து விராட் கோலி களம் இறங்கினார். அவர் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சாண்ட்னெர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்கிழமை (ஜனவரி 24) இந்தூரில் நடைபெறவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை