எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை!
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் சரியான புரிதல் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனக ரத்நாயக்க, தன்னை பதவியில் இருந்து நீக்குவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனக ரத்நாயக்க,
“பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று மின்சக்தி அமைச்சர் நேற்று அறிக்கை விட்டதைப் பார்த்தேன். இது எளிதான செயல் அல்ல. தவறு இருப்பின் அமைச்சர் பாராளுமன்றத்துக்கும் எனக்கும் விடயங்களை விளக்கி கடிதம் அனுப்ப வேண்டும். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்க வேண்டும். காரணங்களைக் கூற எனக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதன் பிறகும் 113 பேரின் பெரும்பான்மை வாக்குகளால்தான் உறுப்பினர் ஒருவரையோ அல்லது என்னையோ நீக்க முடியும். இது பாரிய செயற்பாடாகும். ஆணைக்குழு உறுப்பினர்களையோ, தலைவரையோ நீக்காமல், இவ்விடயம் தொடர்பில் போதிய புரிதல் இல்லாத அமைச்சரை நீக்கி, இவ்விடயம் தொடர்பில் சரியான புரிதல் கொண்ட அமைச்சரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு நான் பரிந்துரைக்கின்றேன்.”
கருத்துக்களேதுமில்லை