இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் என ஆனோல்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்!
இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைத்திருக்கின்றார் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றஞ்சாட்டினார்.
யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்று சபை அமர்வுக்கு வரமால் கையெழுத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். சபை கூட்டத்திலே முழுமையாக கலந்துகொள்ளாமல் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுவது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
தாம் கொண்டுவந்த செயல்திட்டங்களை இடைநிறுத்துகிறார்கள் எனக் கூறுகின்றார். ஆனால் அவர்கள் கல்வெட்டுக்களில் பெயர்போட்ட திட்டங்கள் எல்லாமே எனது காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள்.
ஆரிய குளம் தவிர முன்னாள் முதல்வரால் புனரமைக்கப்பட்ட அனைத்து குள திட்டங்களும் நான் முதல்வராக இருக்கும் போதே முன்மொழியப்பட்ட திட்டங்களாகும்.
என்னால் ஆரம்பிக்கப்பட்ட செயல்திட்டங்களை தான் முன்னாள் முதல்வர் செயற்படுத்தினரே தவிர அவர் ஒன்றும் புதிதாக ஒன்றும் செய்யவில்லை.
டயலொக் நிறுவனத்தினருடன் ஒப்பந்தமே இல்லாத போது குளத்தின் அண்மையில் பதாகைகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.இது ஒரு வியப்பான விடயமாக உள்ளது.
தங்களுடைய விளம்பரத்திற்காகவும் தங்களுடைய சுயலாப அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விடயமே தவிர புதிதாக அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது வேறு திட்டங்களை செயற்படுத்தவில்லை.
நான் முதல்வராக இருக்கும்போது அரசாங்கத்திடமிருந்து 720 மில்லியன் ரூபா நிதியினை பெற்று பல திட்டங்களை நிறைவேற்றி இருந்தேன். கம்பரெலியா திட்டம் வேறு பல திட்டங்களை செயற்படுத்தி யாழ் நகரத்தில் பல வேலை திட்டங்களை செயற்படுத்தி இருக்கின்றோம்.
யுத்தத்தின் போது அழிவடைந்த யாழ். மாநகர சபையின் நிரந்தர கட்டிடத்தினை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அந்தக் கட்டிடத்தினை கட்டுவதற்கு அடித்தளமிட்டது நான் தான்.
இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க வக்கில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைக்கிறார். வெட்கம் இல்லையா? அவருக்கு.
ஒரு சட்டம் தெரிந்த சட்டத்தரணி திருட்டுத்தனமாக நான் முதல்வராக வந்ததாக தெரிவிக்கின்றார். இது ஒரு வியப்பான விடயம்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை