எட்டு கோடி ரூபாய் செலவிலான பணியை புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் – மணிவண்ணன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில்  எட்டுக்கோடி ரூபாய் செலவில் எம்மால் புனரமைக்கப்படவிருந்த குளத்தின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வி.மணிவண்ணன்
இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதி சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள நகரக் குளத்தை  புனரமைப்புச் செய்வதற்காக தனியார் நிறுவனமொன்றின் எட்டுக் கோடி பெறுமதியான நிதிப் பங்களிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்புப் பணிகளுக்காக  அடிக்கல் நாட்டப்பட்டது யாவருமறிந்த விடயமே.இந் நிலையிலே எமது ஆட்சியைக் கவிழ்த்து உள்ளூராட்சி ஆணையாளராலே திருட்டுத்தனமாக சட்டவிரோதமாக தெரிவு செய்யப்பட்ட சட்டவிரோத முதல்வர்  சட்டவிரோதமாகச் சபையைக் கூட்டி தீர்மானமொன்றை எடுத்ததாகக் அறிந்தோம்.

கல்வியங்காடு பொதுச்சந்தையில்  கட்டடமொன்று  திறந்து  வைக்கப்பட்டது. அதிலே நாட்டப்பட்ட நினைவுக்கல்லையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளதாகவும் அறிந்தேன்.

நான் முதல்வராக இருந்த போது  நாடு பொருளாதார நிலையிலே பாதிக்கப்பட்டிருந்தாலும் தனியார் நலன் விரும்பிகள், நிறுவனங்களின் கால்களிலே விழுந்து இவ்வாறான பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தேன். ஆனோல்ட் முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக  தனது புதுவீட்டைக் கட்டினார்.  அதுதான் அவர் செய்த விடயம். ஒரு முதல்வர் பதவியெடுத்தவுடன் நல்ல விடயங்களை முன்னெடுக்காமல் செய்யும் காரியங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது 8 கோடி செலவில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. நான் தனியாரிடம் மன்றாடிப் பெற்ற நிதியின் மூலம் புனரமைத்த ஆரியகுளத்தை என்ன செய்யப் போகின்றார்களோ தெரியாது.

சட்டவிரோதமாக இரவோடிரவாக தன் பண செல்வாக்கு மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக முதல்வராக வந்தவர் – மாநகர சபை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கினார் என்ற செய்தியும் முகநூல் வலைத்தளங்களில்  பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
எனவே இதை மக்கள் சரியாக புரிந்து கொண்டு எதிர்வரும் தேர்தலில் சட்ட விரோதிகளையும் பச்சோந்திகளையும் நகரத்திலிருந்து அடித்து விரட்டவேண்டும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.