மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை உறுதி
நாளைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
உயர்தர பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் வழங்கிய ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த முறைப்பாடு தொடர்பில் தமது வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் நாளைய தினம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது அவசரமான விடயம் என்பதனால் அதனை ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல என நீதிபதி யசந்த கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை