தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் பேரணி நாளை ஆரம்பம்!

அரசின் அடக்குமுறையை எதிர்த்தும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி இடம்பெறும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழர்களின் கரிநாளான இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் இந்தப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கும். நான்கு நாள் வாகனப் பேரணியாக அது மட்டக்களப்பைச் சென்றடையும்.

பேரணியின் பாதை குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்கள்ப்பு நோக்கி முன்னெடுக்கப்படும் இந்தப் பேரணியானது நாளை காலை 10 மணிக்கு தொடங்கும். யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா வளாகத்திலிருந்து தொடங்கும் பேரணி காங்கேசன்துறை வீதி வழியாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியை அடைந்து அங்கு அஞ்சலி செலுத்தும். பின்னர் மணிக்கூட்டுக் கோபுர வீதி, வைத்தியசாலை வீதி வழியாக ஏ – 9 வீதியை அடைந்து செம்மணி சந்திவரை கால்நடையாகச் செல்லும்.

அங்கிருந்து வாகனங்களில் பேரணியின் பயணம் தொடங்கும். நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக முதல் நாள் மலை கிளிநொச்சியைச் சென்றடையும் பேரணி இரணைமடுவில் நிறைவுறும்.

இரண்டாம் நாள் பேரணி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரந்தனில் இருந்து தொடங்கும். வவுனியா மற்றும் மன்னாரிலிருந்து கிளிநொச்சியை வந்தடையும் பேரணிகளையும் இணைத்துக் கொண்டு முல்லைத்தீவு நோக்கி புறப்படும்.

புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை வந்தடையும் பேரணி அங்கிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தும். பேரணியின் இரண்டாம் நாள் முல்லைத்தீவில் நிறைவடையவுள்ளது.

மூன்றாம் நாள் பெப்ரவரி 6ஆம் திகதி காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவிலிருந்து பயணத்தைத் தொடங்கும் பேரணி திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி ஊடாக திருகோணமலையை நகரை மதியம் 1.30 மணியளவில் வந்தடையும். பேரணியின் மூன்றாம் நாள் வெருகலில் நிறைவுபெறும்.

நான்காம் நாள் பெப்ரவரி 7ஆம் திகதி காலை 10 மணிக்கு வெருகலிலிருந்து தொடங்கும் பேரணி வாகரை சென்று அங்கிருந்து மட்டக்களப்பு நகரை வந்தடையும்.

அதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரணியாக மக்கள் மட்டக்களப்பை வந்தடைவார்கள். அங்கு நடைபெறும் இறுதிப் பொதுக் கூட்டத்துடன் பேரணி நிறைவுபெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.