தென்னிலங்கையினர் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்- ஸ்ரீகாந்தா
“தென்னிலங்கையிலே மனித உரிமை மீறல், இலஞ்சம், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஜனநாயகத் தரப்புக்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனநாயக ரீதியாக முன்னாள் ஜனாதிபதியை விரட்டியடித்த தென்னிலங்கை போராட்டத்தில் ஏன் தமிழர்கள் இணையவில்லை என்பதை அவர்கள் சிந்திக்கவேண்டும். தமிழர்களோ தமிழர் தரப்போ தீர்வாக ஏற்றுக்கொண்டிராத 13 ஆவது திருத்தத்தை வெளிநாட்டுக் கருணையால் வாழும் இலங்கை ஆட்சியர்கள் முழுமையாக அமுல்படுத்துவதாகக் கூறியிருந்தனர்.
மாகாணங்களுக்குள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இரண்டு வருடங்கள் அல்ல இரண்டு வாரங்கள் போதும். ஆனால், 13 இற்கு எதிராக தென்னிலங்கையில் குரல் எழுப்பப்படுகின்றது. 13ஐ முழுமையாக அமுல்படுத்தக்கூடாது என பெளத்த தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையிலே இந்த நாட்டிலே ஆட்சி அமைப்பு முறைமையை மாற்றி அமைப்பதற்கு சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.
ஐனநாயகப் போராளிகளாக தென் பகுதியிலே மக்கள் மத்தியில் தொடர்ந்து போராடி வருபவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனவே, தமிழ் மக்களின் கோரிக்கையை அவர்கள் ஏற்காத வரையில் அவர்களின் ஜனநாயக ரீதியான எந்தவொரு போராட்டத்துக்கும் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது.
தென்பகுதியில் ஜனநாயக ரீதியில் போராடும் இளைஞர், யுவதிகள், அரசியல்வாதிகள், முற்போக்கு சக்திகள் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்க வேண்டும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை