தேசமே எழுந்துவா’ என்ற கருப்பொருளில் சுதந்திர தின கரிநாள் பேரணி – யாழில் இருந்து ஆரம்பம்

‘வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா’ என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான இன்று கரிநாள் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரிநாள் என வலியுறுத்தி குறித்த பேரணிகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து கரிநாள் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகிய பேரணி நாச்சிமார் கோவிலடியூடாக பிரதான தபால் அலுவலகம், தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக் கோபுரம், வைத்தியசாலை வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியைச் சென்றடையும்.

செம்மணியிலிருந்து வாகனங்களில் பயணிக்கும் பேரணியானது நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து முதலாம் நாளினை இரணைமடுவில் நிறைவுசெய்து கொள்ளும்.

இரண்டாம் நாள் பேரணி பெப்ரவரி 5ஆம் திகதி காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் அணிகளை இணைத்துக் கொண்டு முற்பகல் 10.30 மணியளவில் முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்.

செல்லும் வழியில் புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு,உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பைச் சென்றடையும்.

அங்கிருந்து முள்ளிவாய்க்கால் சென்று உறுதியெடுத்துக்கொண்டு முல்லைத்தீவைச் சென்றடைந்து பேரணியின் இரண்டாம் நாள் நிறைவு பெறும்.

மூன்றாம் நாள் பெப்ரவரி 6ம் திகதி காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடியூடாக திருகோணமலையை பி.ப.1.30 மணியளவில் சென்றடையும்.

பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் வெருகலில் மூன்றாம் நாள் நிகழ்வினை நிறைவு செய்யும்.

நான்காம் நாள் பேரணி பெப்ரவரி 7ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டுநகரைவந்தடையும்.

அதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சியாக மக்கள் இணைந்து மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.