மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மதுபோதையில் வந்த மூன்று பொலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் இதற்கு நீதியை பெற்றுத் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (02) இரவு நண்பர் ஒருவரின் பிறந்த தின கொண்டாட்டத்தை நிறைவு செய்து சுமார் 300 மீற்றருக்குள் இருந்த தமது வீட்டுக்கு பதினைந்து வயதுடைய மாணவர்கள் இருவர் சென்றுள்ளனர்.
இதன்போது தேவிபுரம் ஆ பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் மதுபோதையில் வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் மாணவர்களை மறித்து அவர்களிடம் இருந்த தொலைபேசிகளை பறித்து விட்டு இருவரும் போதைப் பொருள்கள் பாவித்துவிட்டு வருகிறீர்களா என கேட்டு இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட போது மாணவர்கள் கத்திய சத்தம் கேட்டு பெற்றோர் வந்தபோது பொலிசார் குறித்த இடத்தை விட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மாணவர்களை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் சென்ற பெற்றோர் அங்கு அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் மாணவர்களை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (03) பெற்றோரால் முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் இதுவரை நீதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் மாறாக பொலிசாரின் அழுத்தங்களால் வைத்தியசாலையில் இருந்து ஒரு மாணவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மற்றைய மாணவருக்கு எலும்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சிகிச்சையில் உள்ளதாகவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை