வடக்கிலிருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பை வந்தடைந்தது..

‘தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி வெற்றிகரமாக மட்டக்களப்பை அடைந்துள்ளது.

வடக்கிலிருந்து பேரணியாக வந்த மக்களை சதிகளையும், தடைகளையும் முறியடித்து ஆரவாரத்தோடு கிழக்கு மக்கள் வரவேற்றுள்ளனர்.

கருணா என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனின் சொந்த ஊரான கிரான் பகுதியில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு பேரணியாக வடக்கில் இருந்து வந்த தமிழ் உறவுகளை ஆரவாரங்கள் மற்றும் தமிழினத்தின் விடிவிற்கான கோஷங்களுடன் வரவேற்றுள்ளனர்

வடக்கு மக்களுக்கு கிழக்கு மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் எனும் நிலைப்பாட்டை முற்றாக முறியடித்து வடக்கு, கிழக்காக நாங்கள் பிரிந்திருந்தாலும், ”தமிழர்களின் கோரிக்கை ஒன்றே” என குறித்த வரவேற்பின் மூலம் கிழக்கு மக்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

 

நித்திரையா தமிழா - தாயகப் பாடல் ஒலிக்க - கருணாவின் மண்ணில் வடக்கு மக்களுக்கு அமோக வரவேற்பு! | Black Day Protest Tamil Of Sri Lanka Batticaloa

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட குறித்த மக்கள் பேரணியை குழப்புவதற்கு கடந்த மூன்று தினங்களாக தங்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்ததாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இராணுவ புலனாய்வாளர்கள், அரச புலனாய்வாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவினைவாதிகளால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டும், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பல தடைகள், அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்களை கடந்து வெற்றிகரமாக கிழக்கினுள் தாங்கள் பிரவேசித்து, தற்போது மட்டக்களப்பை அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல தடைகளையும் தாண்டி கிழக்கை அடைந்த தங்களை மட்டக்களப்பு வாழ் தமிழ் உறவுகள் வரவேற்று, தமிழனின் உரிமையை வென்றெடுக்கும் பேரணிக்கு வலுச் சேர்த்தமை மகிழ்ச்சியளிப்பதாக வடக்கில் இருந்து வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பேரணியில் கலந்து கொள்ளவிடாது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக இராணுவ, அரச புலனாய்வாளர்கள் மற்றும் பிரதேச பிரிவினைவாதிகளால் மாணவர்கள் தாக்கப்பட்டும், கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டும் இருந்ததாக கூறப்படுகின்றது.

அதேசமயம், குறித்த பேரணிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் குறித்த முற்போக்கு பிரதேசவாதிகளால் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நித்திரையா தமிழா - தாயகப் பாடல் ஒலிக்க - கருணாவின் மண்ணில் வடக்கு மக்களுக்கு அமோக வரவேற்பு! | Black Day Protest Tamil Of Sri Lanka Batticaloa

அத்தனை தடைகளையும் தாண்டி தமிழனின் உரிமைகளை வென்றெடுக்க, தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தி, மட்டக்களப்பில் ஒன்றாய் சங்கமித்த வட, கிழக்கு மக்கள், பேரணியாக மட்டக்களப்பு காந்தி பூங்காவை நோக்கி செல்கின்றனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் குறித்த தமிழர் எழுச்சிப் பேரணி நிறைவடையவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.