அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது
பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் என்ற ரீதியில் முழு நாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது. பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் ஏதும் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கையில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்பதால் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர்.
ஆங்கிலேயர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை கையளித்து சென்றார்கள்.
சிங்கள அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.
சிங்கள சமூகத்தினருக்கு பொருளாதார சுதந்திரம் தற்போது இல்லை என்பதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் 13 ஆவது திருத்த நகல்களை தீயிட்டார்கள். இவர்களை போல் இந்து குருக்கள் அல்லது முஸ்லிம் மௌலவி செயற்பட்டிந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.
பௌத்த பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளது என்பதால் அவர்கள் அரசியலமைப்பை எரிக்கிறார்கள்.
ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போது 13 ஆவது திருத்தம் ஆகவே சிங்கள மக்கள் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துரைக்க முன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை