இன்று முதல் தடையில்லா மின்சாரம்- கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
இன்று (16) முதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபை கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் மின் பாவனையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி மின்கலங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை