அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன்…

(சுமன்)

பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சம்மந்தமாக வெளிவந்துள்ள கருத்துகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டவரப்பட்டு சுமார் 14 வருடங்கள் நிறைவுறுவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கின்றது. 2009 மே 18ம் திகதி சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் இருக்கின்றன. மன்னாரின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் இதற்குச் சாட்சியாக இருந்திருக்கின்றார். அதேபான்று ஆயிரக்கணக்கான போராளிகள் இறந்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கன உறவுகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த வேளையில் 14 வருடங்களுக்குப் பின்னர் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கின்றார். இந்தக் குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இது விடயமாகப் பல கருத்தாடல்கள் இருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இறுதித் தருவாயில் நின்றிருந்த மூத்த போராளிகள் கூட பல கருத்துகளை முன்வைத்திருக்கின்றார்கள். நானும் நீண்ட காலமாக ஆயுத அரசியல் ரீதியாகப் போராட்டத்தில் இருப்பவன் என்ற ரீதியில் நான் நினைக்கின்றேன் யுத்த களதத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன்.

14 வருடங்களுக்குப் பின்னர் அவர் உயிரோடு இருக்கின்றார் என்ற விடயத்தை அவரே பொதுவெளியில் தோன்றினால் மாத்திரமே அனைவரும் நம்பக் கூடிய வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.