இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு தீர்வுகாண விசேட நடவடிக்கைகள் தேவை -சார்ள்ஸ் நிர்மலநாதன்
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்கள் வாழ்வாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு கடற்றொழில் அமைச்சரால் நிரந்தர தீர்வைக் காண முடியாது என்பது எமது நிலைப்பாடாகும். ஆகவே காலம் காலமாகத் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிவிவகாரத்துறை அமைச்சு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் இரு கட்டளைச்சட்ட மூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் –
அரசாங்கத்தால் கடந்த காலங்களில் நெல் கொள்வனவு செய்யப்பட்டது. நிதி இல்லை ஆகவே நெல்லை கொள்வனவு செய்ய முடியாது என தற்போது குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவுக்கு வந்த போது நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக நிர்ணயிப்பதாக குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சம்பா நெல்லை தற்போது கொள்வனவு செய்வதில்லை. இதனால் தனியார் வியாபாரிகள் 5 ஆயிரத்து 500 ரூபா முதல் ஆறாயிரம் ரூபாவுக்கு மாத்திரமே கொள்வனவு செய்கின்றனர்.
இதனால் ஒரு மூடைக்கு மூவாயிரம் ரூபா வரை நட்டம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. எனவே சம்பா நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி எடுக்கவேண்டும்.
கடற்றொழில் தொடர்பில் குறிப்பிட்ட சில நாள்களாகக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு பகுதி மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இருந்த கடற்றொழில் அமைச்சர்கள் இதனைக் கட்டுப்படுத்தியிருந்தார்கள். தற்போது கடற்றொழில் அமைச்சர் என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
இவர்கள் தொடர்ச்சியாக வரும் போது எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வை கடற்றொழில் அமைச்சால் கையாள முடியாது என்பது என்னுடைய நிலைப்பாடு.
இது நாடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் இது தொட்பில் அமைச்சர் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை முன்வைக்க வேண்டும். மீனவ சமூகங்கள் இது தொடர்பில் கேட்கும் போது கடற்றொழில் அமைச்சர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துச் செல்கின்றார்.
தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு? நிரந்தர தீர்வை எட்டுவதற்குரிய முயற்சிகளை வெளிநாட்டு அமைச்சு எடுக்க வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை