அமெரிக்க உயர் மட்ட பாதுகாப்பு குழுவின் விஜயம் குறித்த தகவல்களை நான் அறியேன் – அலி சப்ரி
அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்கள், எந்த விடயம் தொடர்பில் பேச்சில் ஈடுபட்டார்கள் என்பதை நான் அறியவில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவிற்கு பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தேசிய சுதந்திரக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ஸ, இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் உரையாற்றி, வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டின் வருகையைத் தொடர்ந்து பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்தார்கள்.
இவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார்கள்.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள், எந்த விடயம் தொடர்பில் பேச்சில் ஈடுப்பட்டார்கள் என்பதை ஆளும் தரப்பின் பிரதம கொறடா அறியாவிட்டாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவார்கள். ஆகவே அவர்கள் உண்மை விடயத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும். – என்றார்.
இதனை தொடர்ந்து வெளிவிவகாரததுறை அமைச்சர் அலி சப்ரி கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு முதலீடு சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.
இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய விமல் வீரவன்ஸ, அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்தமை தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிந்திருக்க வேண்டும்.
ஆகவே, அவர்கள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள், எந்த விடயம் தொடர்பில் பேச்சில் ஈடுபட்டார்கள் என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சர் அறிவாரா? அவ்வாறாயின் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும். – என்றார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள்? எந்த விடயம் தொடர்பில் பேச்சில் ஈடுபட்டார்கள் என்பதை அறியவில்லை எனக் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை