விக்கி அவரின் சம்மந்தியான வாசுதேவவுடன் இணைந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுகின்றார் – சாணக்கியன்!
நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –
நாடு பாரிய பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கனவு உலகத்தில் இருக்கிறார்களா? என்று என்ன தோன்றுகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடையும் என குறிப்பிடும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் தேவையற்ற செலவுகளுக்கு நிதி செலவு செய்வதை அவதானிக்க முடிகிறது.
நாட்டு மக்களிடம் காணப்படும் பிரச்சினைகளும் அரசாங்கத்திடம் காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. நாட்டு மக்கள் யாரும் தேசிய சுதந்திர தினத்தை நடத்துமாறு கோரவில்லை.
ஜனாதிபதி கண்டியில் வெகுவிமர்சையான பெரஹராவை நடத்துகிறார். ஆனால் நாட்டு மக்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில் உள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி அனைத்து விடயங்களையும் கேலிக்கூத்தாக்கியுள்ளார்.
பொருளாதார நெருக்கயில் இருந்து மீண்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை எவராலும் குறிப்பிட முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.
அரசாங்கத்திற்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக முறைக்கு அமைய இடமளிக்காவிட்டால் ஜனநாயகத்துக்கு எதிரான வழியில் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.
மக்கள் தமது நிலைப்பாட்டை போராட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தும் போது இராணுவத்தை களமிறக்கி நாட்டில் அமைதியற்ற தன்மையை தோற்றுவித்து தேர்தலை முழுமையாக பிற்போடும் நோக்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
பொருளாதாரம் மற்றும் அரசமைப்பு என்பது வேறுபட்டது என்பதை முதலில் ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். தமது தேவைக்கு அமைய ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியாது.
நாட்டு மக்களின் விருப்பத்துக்கு முரணாக பலவந்தமான முறையில் ஆட்சியில் இருக்க ஜனாதிபதியும், அரசாங்கமும் முயற்சிக்கின்றன.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாக வேண்டும். அதற்கு நாட்டு மக்களின் விருப்பத்துடனான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். ஆகவே நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வந்தவர் மற்றும் அதனை முன்மொழிந்தவர் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இவர்கள் தான் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து அதனூடாக அரசியல் செய்தார்கள்.
இவர்கள் தான் கடந்த காலங்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக கடும் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.
இவ்விரு காரணிகளும் தோல்வியடைந்தால் இவர்கள் தற்போது வெளிநாட்டு சூழ்ச்சி என்ற விடயத்தை கையில் எடுத்துள்ளார்கள். தேர்தல் செய்ய ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளைப் பற்றிக் கொண்டுள்ளார்கள்.
இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது.
விமல் அணியினர் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசும் போது சி.வி.விக்கினேஷ்வரனும் சிங்கள ஊடகங்களுக்கு அவ்வாறான தொனியில் கருத்துக்களை முன்வைத்தார். ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
உண்மையில் இவர்களுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை காணப்படுமாயின் இவர்கள் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாத போது சட்டத்துக்கு முரனான வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரை செய்த அளவிற்கு மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. முறையற்ற வகையில் மின்கட்டணம் 66 சதவீதத்தால் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மின்மானி வாசிப்பாளர்கள் மின்கட்டணத்தை நிர்ணயிக்க செல்லும் போது சட்டத்துக்கு முரணாக செயற்படுத்தப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தை தாம் செயற்படுத்துகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். – எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை