ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதனாலேயே ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து வருகின்றார் – ஞா.ஸ்ரீநேசன்
பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதாலே மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய விடாமல் அந்த தேர்தலையே தவிர்த்து வருகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –
தேர்தலை இடைநிறுத்தியமைக்கு ஜனாதிபதி கூறும் காரணம் பணமில்லை என்பதே. இதில் என்ன வேடிக்கையான விடயம் என்றால் சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினத்தைக் கொண்டாட கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை விட சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதன் ஊடாகவே தனக்கு அரசியல் ரீதியாக இலாபம் கிடைக்கும் என்றே அவர் இவ்வாறு செலவிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலையில் தேர்தலை எதிர்கொண்டால் பொதுஜன பெரமுன கட்சிக்கும் , ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டு எதிர்க் கட்சிகள் மக்கள் ஆணையைப் பெற்றுவிடும். அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய சங்கடமான சூழ்நிலை தனக்கு ஏற்பட்டு விடும் என்றறிந்தே ஜனாதிபதி தேர்தலைத் தவிர்த்து வருகின்றார்.
மொட்டுக் கட்சியினரும், ஐக்கிய தேசிய கட்சியினரும் தங்களுக்கு ஏற்படப்போகும் தோல்வியை முன்கூட்டியே அனுமானித்து தங்களின் சுயலாபத்துக்காக வேண்டியே இந்தத் தேர்தலை பிற்போட்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்ததுடன் அதனது விளைவுகளை ஜனாதிபதி மக்கள் போராட்டங்களின் மூலம் எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை