அடுத்த வாரம் முதல் அரசியல் போராட்டம் – பீரிஸ் சூளுரை
ஜனநாயகத்தைப் படுகொலை செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசமைப்பிற்கு முரணான ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு இடமளித்தால் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க எதிர்வரும் வாரம் முதல் அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நாட்டை சீரழித்து அரசமைப்பைப் பாதுகாக்க முடியாது, பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதைக் கொண்டு அவர் அரசமைப்பிற்கு அமைய செயற்படமாட்டார் என்பது தெளிவாக விளங்குகிறது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நாடுகள் அரசமைப்பிற்கு முரணாக செயற்பட்டு, ஜனநாயகத்தை படுகொலை செய்து பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளவில்லை.
ஜனநாயகத்துக்கு முன்னுரிமை வழங்கித் தான் அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை சிறந்த உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது, அதனால் அவர் தேர்தலுக்கு தயார் இல்லை. பொருளாதாரப் பாதிப்பு எனக் குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை நடத்தாமல் பலவந்தமான முறையில் அதிகாரத்தில் இருக்க அவர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
ஜனநாயகத்தைப் படுகொலை செய்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜனநாயக ரீதியில் இடமளிக்காவிட்டால் நாட்டு மக்கள் ஜனநாயகத்துக்கு எதிரான வழிமுறையில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.
நிறைவேற்றுத்துறை அதிகாரம் தேர்தல் உரிமையை பறிக்கும் போது நாட்டில் பாரிய விளைவுகள் தோற்றம் பெற்றன.
30 வருட கால யுத்தம் இவ்வாறான பின்னணியில் தான் தோற்றம் பெற்றது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டுக்கு இடமளித்தால் நாடு பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.
ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க எதிர்வரும் வாரம் முதல் அரசியல் ரீதியான போராட்டத்தில் ஈடுபடுவோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை