இணைத் தலைவருக்கான பதவியை ஏற்கவில்லை – செல்வம் எம்.பி அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்று  ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக என்னை நியமித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், குறித்த நியமனத்தினை நான் இதுவரையில் பெறவில்லை. அதுபற்றிச் சிந்திக்கவும் இல்லை.

எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இந்நிலையில், ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதேநேரம், தற்போதைய சூழலில் இணைத்தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்கின்ற தீர்மானத்தினை எதனையும் எமது கட்சி தீர்மானின்கவும் இல்லை என்றார்.

முன்னதாக, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்களால் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது வரையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மட்டுமே இணைத்தலைமைப் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.