அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம்- சஜித்
நிறைவேற்று அதிபர் உட்பட எவருக்கும் அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு உரிமை இல்லை. அரசியல் சதி அல்லது அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம் என அதிபருக்கு சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று (24) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஒரு நாடு என்ற ரீதியில் பழைய முறையில் சிந்தித்து சிந்தித்து நாம் எமது மதங்கள்,எமது இனங்கள் பற்றி பேசி இன,மத பேதங்களை உருவாக்கி,தாம் தேசப்பற்றாளர்கள் என்ற மனநிலையை கட்டமைத்து அதே சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது.
சில காலத்திற்கு முன்பு பழங்குடி மோதல்கள் இருந்த ருவண்டா இப்போது ஆபிரிக்காவின் சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 53 சதவீதம் பேர் படித்த பெண்களாக இருக்கின்றனர்.
இவ்வாறானதொரு மோதலும் யுத்தமும் இருந்த எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்தாலும் நல்லிணக்கம் என்பது கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது.
இன,மத வேறுபாடுகளை உருவாக்கியதன் விளைவாகவே எமது நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த வங்குரோத்து நிலைக்கு சிங்கள,தமிழ், முஸ்லிம், பேர்கர் என்ற பாகுபாடு இல்லை என்பதால் அனைத்து இன,மதத்தினரும் இணைந்து இந்த வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல ஒன்றிணைய வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இன,மத பேதங்களைத் தூண்டி நாட்டை அழிக்கும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் .
சாதி,மத பேதங்களை ஒதுக்கிவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப ஒன்றாக ஒன்றிணைய வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுவதும் பிரதேச செயலக மட்டத்தில் உற்பத்தி கைத்தொழில்களை உருவாக்கும் சகாப்தத்தை ஆரம்பிக்கப்படும்.
டிஜிட்டல் புரட்சி மூலம் கல்வித்துறையில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்படும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை