அரச உத்தியோகஸ்தர்கள் குருதிக்கொடை வழங்க முன் வர வேண்டும்!
யாழ்.மாவட்டத்தில் குருதி தட்டுப்பாடு உள்ளது. இதனால் நாம் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் குருதிக்கொடை செய்வதற்கு முன்வரவேண்டும் என யாழ்.மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தால், அரச உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறண் தடைகாண் பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வு நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போது, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் –
அரச உத்தியோகத்தர்கள் அலுவலக நேரங்களில் மக்கள் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். உத்தியோகத்தர்கள் அலுவலகங்களில் வீண் பொழுது போக்குகின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஏற்படக்கூடாது. அலுவலகத்துக்கு வருகின்ற வயோதிபர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுக்கவேண்டும்.
அரச பணிக்கு வருகின்ற அனைவரும் ஏதோ ஒரு துறையில் படித்தவர்கள். அவர்கள் பண்பாக செயற்பட வேண்டும். பொதுமக்கள் மனங்களில் இடம்பிடிக்கத்தக்க செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்.
அலுவலக உத்தியோகத்தர்களோ ஆசிரியர்களோ வேறெந்த துறைசார்ந்தவர்களோ தமது பணியுடன் மட்டும் நின்றுவிடாமல் மக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டும்.
யாழ்.மாவட்டத்தில் குருதிக்குத் தட்டுப்பாடு உள்ளது. இதனால் நாம் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் குருதிக்கொடை செய்வதற்கு முன்வரவேண்டும். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என வாய்வழியாகக் கூறிவிட்டு இருக்காமல் அதை செயலில் காட்டவேண்டும். – என மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை