கல்முனையில் பாதணி விற்பனை நிலையத்தில் தொழில் புரிபவர் போதை மாத்திரைகளுடன் கைது
பாதணிகள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இன்று (26)கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம், கல்முனை நகரப் பகுதியில் பிரபல பாதணிகள் கடையில் பணியாற்றும் நபர் போதை மாத்திரைகளை விநியோகிப்பதாக கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையிலேயே இன்று மாலை தேடுதலில் ஈடுபட்டு பாதணி கடையில் பணியாற்றிய குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
அந்த நபர் கைதுசெய்யப்பட்டபோது அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட காலமாக போதை மாத்திரைகளை தொலைப்பேசியின் ஊடாக தொடர்புகொண்டு விநியோகித்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட பின்னரும் சந்தேக நபருக்கு போதை மாத்திரை விற்பனை தொடர்பான பல தொலைப்பேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்துள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபரோடு கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களையும் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை