ஏற்றுக்கொள்ளக்கூடிய, சாதகமான தீர்மானத்தை அறிவிக்க சீனா இணக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டுள்ள பேச்சு தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை போன்ற குறைந்த வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வழங்கப்படும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அமெரிக்கா மற்றும் சீன நிதித்துறை அதிகாரிகளுக்கு இடையில் விசேட பேச்சு கடந்த வாரம் இந்தியாவில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டின் இரண்டாம் கட்டத்தின்போது இலங்கை உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொண்டுள்ள சீன கடன் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் இதன்போது தீவிரமாக ஆராயப்பட்டது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக சீன கூட்டரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநராக சீனா விளங்குவதால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்புக்கு சீனாவின் உத்தரவாதம் அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவின் ஒத்துழைப்பு சாதகமாகக் காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலங்கையின் அரச கடன் நிலைபேறான தன்மையில் காணப்படும். அதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணலாம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை