இலங்கைக்கு இரகசியமாக கொண்டு வரப்பட்ட அதிசொகுசு வாகனம் மாயம்! பெருந்தொகையை வரியாக செலுத்திய அரசாங்கம்
ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின் பாவனைக்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் டொயோட்டா ப்ரியஸ் ஹைபிரிட் அதிசொகுசு வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் 2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கப்பதிவேடுகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதற்கான சுங்க வரியாக 18 லட்சம் ரூபாவை ஜனாதிபதி அலுவலகம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வாகனம் தொடர்பான கோப்பு தற்போது ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை எனவும், இந்த அதிசொகுசு வாகனம் தற்போது ஜனாதிபதி அலுவலக வாகன தளத்தில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை தற்போது யார் பயன்படுத்துகின்றார்கள், யாருக்காக இறக்குமதி செய்யப்பட்டது போன்ற தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும், இருப்பினும், இந்த அதிசொகுசு வாகனம் ஜனாதிபதி அலுவலகத்தின் தேவைக்கேற்ப கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் இதுவரை எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமையால் ஜனாதிபதி அலுவலகம் என்ற போர்வையில் இது மூன்றாம் தரப்பினருக்கு கொண்டுவரப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கமைய, வாகனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை