இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை ஈட்டிக்கொடுக்க விசேட திட்டம்
நாட்டிற்கு டொலர்களை சம்பாதிப்பதற்காக எச்.ஏ.எஸ்.எஸ் வகைகளை கொண்ட ஆஸ்திரேலிய வெண்ணெய் பழம் இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக விரிவுபடுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெண்ணெய் பழத்திட்டத்தின் முதற்கட்டமாக பதுளை மாவட்டத்தில் 200 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தின் மரக்கன்றுகள் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பண்டாரவளை பிரதேசத்தில் நடப்பட்டுள்ளது.
எச்.ஏ.எஸ்.எஸ். வெண்ணெய் பழம் வகையின் சிறப்பு என்னவென்றால், பழங்கள் மற்றும் வெண்ணெய் கூழ் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியத்துக்கு உகந்த வெண்ணெய் எண்ணெய்க்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பதுளை மாவட்டத்தில் விவசாயம் செய்யக்கூடிய சுமார் 1000 குடும்பங்களை தெரிவு செய்துள்ளதுடன், அவர்களுக்கு எச்.ஏ.எஸ்.எஸ். வெண்ணெய் இனத்தை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்பம், செடிகள் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று வருடங்களில் இந்தப் பழத்தின் மூலம் வருமானம் ஈட்ட முடியும். மற்றும் ஒரு மரத்தில் 200 கிலோ வெண்ணெய் பழம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை