ரணில் மக்களின் உரிமைகளை தடுக்கிறார் – எஸ் சிறிதரன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாதத் தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளைத் தடுத்து வருகின்றமை மிக மோசமானது. நாடாளுமன்றத்தில் கோமாளிகளின் தலைவனாக அவர் தென்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் முதன்மைக் காரணராக இருக்கின்றார்.
குறிப்பாக 94 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை யாழ்.மாவட்டத்துக்கானதை தீவகத்திற்குள் முடக்கி, அந்தத் தேர்தலில் மற்றவர்களை வாக்களிக்க விடாத பங்கும் அவை சார்ந்தது.
அதற்கு பிற்பாடு வந்த சந்திரிக்கா, வவுனியாவில் கொத்தனி வாக்குகள் மூலம் அந்தத் தேர்தலை நடத்தியிருந்தார். ஆனால், தன்னை ஒரு ஜனநாயகவாதியாக இந்த உலகம் முழுவதும் காட்டிக்கொண்டிருக்கின்ற இன்றைய நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வாதிகாரியாகச் செயற்படுவதை நாங்கள் இன்று அவதானிக்கின்றோம்.
மிக முக்கியமாக நாடாளுமன்றத்தில் ஒரு கோமாளிகளின் தலைவனாகவும், வெளியிலே ஜனநாயக சர்வாதியாகவும் தன்னுடைய அராஜகத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. காணவும்கூடியதாக இருக்கின்றது.
காரணம், மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் போராட்டங்களையும் மக்கள் எழுச்சி போராட்டங்களையும் நசுக்குவதற்காக இடைக்கால தடை உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலமும், நீதிமன்ற தடை உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலமும் நாட்டிலே பேசுகின்ற உரிமையையும், நாட்டிலே போராடுகின்ற உரிமையையும், ஒன்றுகூடுகின்ற உரிமையையும் இந்த நாட்டின் ஜனாதிபதி லிபரல்வாதியென்றெல்லாம் பேரெடுத்த அவர் தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி அவற்றைத் தடுத்து வருவது மிக மோசமானது.- எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை