வன்னேரிக்குளம் வைத்தியசாலை நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துக..! சுகாதார அமைச்சருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம்.
1953 களில் அமைக்கப்பட்டு, கடந்த 70 வருடகாலமாக எந்தப் புனரமைப்புக்கும் உட்படுத்தப்படாத வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்டடத்தை, மீள நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
2023.02.27 ஆம் திகதியிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கிளிநொச்சி மாவட்டம், கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள, வன்னேரிக்குளம் பிரதேச வைத்தியசாலைக் கட்டடம் தற்போது இடிந்துவிழும் நிலையிலுள்ளதால் அப்பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அடிப்படைச் சுகாதார சேவைகளைக்கூட பெறமுடியாது அவதியுறுகின்றனர்.
இவ் வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு, உலக வங்கியினால் ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின்கீழ் (Primary Healthcare System Strengthening Project) 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் அத்திட்டத்தை இதுவரை நடைமுறைப்படுத்தாததால் ஒதுக்கப்பட்ட நிதியை மீளப்பெறும் நிலை உருவாகியுள்ளது.
போரினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியினை, எமது மக்களின் தேவைக்குரிய திட்டங்களுக்காக பயன்படுத்துவதில், அதிகாரபீட அழுத்தங்களையும், இடர்பாடுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, வன்னேரிக்குளம் மற்றும் அதன் சுற்றயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலன்கருதி, வன்னேரிக்குளம் வைத்தியசாலை கட்டட நிர்மாணத்திற்கு உலக வங்கியால் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, அத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை