ஐ.தே.க. தலைமையில் பலம் மிக்க புதிய கூட்டணி : ஐக்கிய மக்கள் சக்தியினரும் இணைவர் – ஹரின்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் பலம் மிக்க புதிய கூட்டணியொன்று உருவாகவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றாகப் பாதிக்கப்பட்டது. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு உலக நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்டன. விமானங்களின் வருகையும் முற்றாக வீழ்ச்சியடைந்தது. எவ்வாறிருப்பினும் இந்த நிலைமையை எத்தனை மாதங்களில் நாம் சரி செய்தோம்?

ஜனவரியில் ஒரு லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரியில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. டிசெம்பராகும் போது அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்த மாதமாக அதனை பதிவு செய்ய முடியும் என்று சவால் விடுக்கின்றோம்.

எமிரேட்ஸ், கட்டார், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தரும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏப்ரலின் பின்னர் சீனாவிலிருந்து பெருந்தொகை சுற்றுலாப்பயணிகள் வருகை தரவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு நிகராக வருமானத்தை சீன சுற்றுலாப்பயணிகளின் வருகையால் பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறு சிறந்த வேலைத்திட்டங்களை நாம் தயாரித்திருக்கின்றோம். எனவே எமக்கு டிசெம்பர் வரை அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு வாய்ப்பளியுங்கள். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள். நாம் அனைவரும் ஜனாதிபதிக்கு பலத்தை வழங்குவோம்.

எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் , ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய பலம் மிக்க கூட்டணியொன்று உருவாகவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த வேண்டும் என்ற எந்தவொரு தேவையும் எனக்கோ , ஜனாதிபதிக்கோ கிடையாது. நான் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய போதும் என்னுடன் வரவிருந்தவர்களை இப்போதே அழைத்து வர வேண்டாம் என்று ஜனாதிபதி கூறினார்.

எவ்வாறிருப்பினும் இனியும் தாமதிக்கத் தேவையில்லை என்றும் , வரவிருப்பவர்களை எம்முடன் இணைத்துக் கொள்வோம் என்றும் நான் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.