ஜி – 20 மாநாட்டில் இலங்கைக்காக இந்தியாவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது – பாலித்த ரங்கே பண்டார

ஜி – 20 மாநாட்டில் இலங்கை தொடர்பாக இந்தியா, பெரிஸ் சமூகம் மற்றும் ஜப்பான் முன்வைத்த கருத்துக்கள் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள சீனாவுக்கு சிறந்த பதிலாக அமைந்திருந்தது.

இந்தியாவின் இந்த முயற்சியை நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

இந்தியாவில் இடம்பெற்று முடிவடைந்த ஜீ – 20 மாநாடு இலங்கைக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பெரிஸ் சமூகம், ஜப்பான் மற்றும் இந்தியா இலங்கையின் நிலைமை தொடர்பாக மிகவும் நல்லமுறையில் எடுத்துரைத்திருந்தன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சீனா நல்ல முடிவொன்றை எடுக்கும் வகையில் அந்த நாடுகளின் பதில்கள் அமைந்திருந்தன.

இந்த விடயத்தில் இந்தியா மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது. அதற்காக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் வீரமுள்ள சிங்கம் போன்றோ நரியைப்போன்றே சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதன் மூலம் எதனையும் செய்ய முடியாது.

சர்வதேச அளவில் கட்டியெழுப்பப்படும் உறுதிமிக்க இணைப்புகளின் வலிமையில் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கடனைப் பெறுவதற்கு நாம் எந்த அளவிற்கு பொருத்தமான தகுதிகளை அடைந்துள்ளோம் என்பது முக்கிய காரணியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு கட்டுப்படக்கூடாது என சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் நாங்கள் பாகிஸ்தானிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ஆரம்பத்தில் நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் சிலவற்றைப் புறக்கணித்து வந்தது.

இதனால் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானில் இருந்து விலகிச்சென்றது. பின்னர் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்னால் மண்டியிடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் எங்களது நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எங்களுக்கு பணம் தேவை என்றிருந்தால் நாங்கள் அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். என்றாலும் ரணில் விக்ரமசிங்க இந்த நிலையை அறிந்த மிகவும் சாமத்தியமாக அவர்களுடன் உரையாடி, எமது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்தக் கடன் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீரவுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மிகவும் அத்தியாவசியமாகவே இருந்தது. இந்தக் கடன் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாமல்போனால் நாட்டின் இருப்புக்கே பாதிப்பு ஏற்படும்.

இதனை உணர்ந்தே ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்தில் இருந்து சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்தார். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.