இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? – தேர்தல் ஆணைக்குழுவின் கடிதத்திற்கு அமைச்சர் பந்துல பதில்
அரசாங்கத்திடம் நிதியிருந்தால் தேர்தலுக்காக அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது? மார்ச்சில் வருமானத்துக்கும் செலவிற்குமிடையிலான இடைவெளி 2300 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு தேர்தலுக்கு நிதியை வழங்குவது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பெற்றுக் கொள்வதில் தலையீடு செய்யுமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவால் சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் என்பது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் உள்ளடக்கமாகும்.
அந்த வகையில் ஏனைய அனைத்து கட்சிகளும் இதற்கு உடன்பட்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் –
எம்மிடம் நிதி இருந்தால் அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. மார்ச் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கல், ஓய்வூதியம், சமுர்த்திக் கொடுப்பனவுகளை வழங்கல் உட்பட ஏனைய தேவைகளுக்காக 8300 கோடி ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னரும் மார்ச் மாத வருமானத்துக்கும் செலவிற்கும் இடையில் 2300 கோடி இடைவெளி காணப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச்சில் கடன் சேவைகளுக்காக 5 ஆயிரம் கோடி அவசியமாகும். அதற்கமைய மார்ச்சில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்துக்கு அதிக பற்றாக்குறை ஏற்படும் என்று திறைசேரியால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பெற்றுக்கொள்வதற்கு கடன் பெறவும் முடியாது. பணத்தை அச்சிடவும் முடியாது. அவ்வாறிருக்கையில் முடியாதவொன்றை எவ்வாறு செய்ய முடியும்?
அதே வேளை அரச ஊழியர்களுக்கான சம்பளம் , ஓய்வூதியம் , சமுர்த்திக் கொடுப்பனவு மற்றும் அரச கடனுக்கான வட்டி என்பவற்றைச் செலுத்துவதைத் தவிர்க்க முடியாது.
எனவே தான் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி செயலாளரால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முன்வைத்துள்ள காரணிகள் தவறென்றால் அதனை நீதிமன்றமே தீர்மானிக்கும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை