சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கும் கடனுதவி குறித்து உன்னிப்பாக அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி
இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி தொடர்பில் கண்காணித்துவருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைவர் கிரேஸ் ஆசீர்வாதம் ஆகியோருக்கு இடையில் லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் கிரேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு விளக்கமளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி ஏற்றுமதியை மையப்படுத்திய போட்டித்தன்மைவாய்ந்ததும், சூழலுக்கு நேயமானதும், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு கொள்கை தொடர்பிலும் அவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பற்றியும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் 5 கோடி யூரோ நிதியுதவியில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டம் தொடர்பாகப் பிரஸ்தாபித்துள்ள கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றவுடன் இலங்கையில் பசுமை செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவது பற்றித் தம்மால் பரிசீலனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை