அனைவரும் ஒன்றுபடுவது அவசியம் – அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குமிடத்து முன்னெப்போதையும்விட இப்போது சுபீட்சமான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கவேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ‘இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான பகிரப்பட்ட இலக்கு: தெற்காசியப்பிராந்தியம் மீதான தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டுவைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தோ – பசுபிக் செயற்திட்டத்தின் ஓராண்டுப் பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், டேனியல் கே.இனோய் பாதுகாப்புக் கற்கைகளுக்கான ஆசிய பசுபிக் நிலையத்தின் பணிப்பாளரும் அமெரிக்கக் கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியுமான ரியர் அட்மிரல் பீற்றர் ஏ.குமடாட்டா மற்றும் ‘இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான பகிரப்பட்ட இலக்கு தெற்காசியப்பிராந்தியம் மீதான தாக்கங்கள்’ என்ற நூலின் இதழாசிரியர் கலாநிதி ஹரிந்திர விதானகே ஆகியோர் உள்ளடங்கலாகப் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மிலிந்த பீரிஸ், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பமாகி இந்த ஆண்டுடன் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றமை தொடர்பாக இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவு பற்றியும் நினைவுகூர்ந்ததுடன் தமது பல்கலைக்கழகத்துடன் அமெரிக்கத்தூதரகம் பேணிவரும் மிகநெருக்கமான தொடர்புகள் பற்றியும் கருத்துவெளியிட்டார்.

அதேபோன்று கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தோ – பசுபிக் செயற்திட்டத்தின் பிரகாரம் இப்பிராந்தியத்தில் நிலவும் சவால்கள் தொடர்பாகவும் ‘இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான பகிரப்பட்ட இலக்கு: தெற்காசியப்பிராந்தியம் மீதான தாக்கங்கள்’ என்ற நூலில் ஆராயப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இருநாடுகளுக்கும் இடையிலான 75 வருடகால இராஜதந்திரத்தொடர்புகள் மற்றும் மக்கள், வளர்ச்சி, பரஸ்பரத்தொடர்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட அதன் தன்மை என்பன தொடர்பாகப் பேசியமையுடன் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் (பெப்ரவரி 27) ஒருவருடம் முன்பதாக இந்திய – பசுபிக் செயற்திட்டத்தின் அறிமுக நிகழ்வில் முதன்முறையாக உரையாற்றியமை தொடர்பாக நினைவுகூர்ந்தார்.

மேலும் இந்தோ – பசுபிக் செயற்திட்டத்தின் அடிப்படைக்கூறுகள் சுதந்திரமானதும், சுபீட்சமானதும், ஒன்றுக்கொன்று தொடர்புடையதும், மீண்டெழக்கூடியதும், பாதுகாப்பானதுமான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை உறுதிசெய்வதையே இலக்காகக்கொண்டிருப்பதாகவும் தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குமிடத்து முன்னெப்போதையும்விட இப்போது சுபீட்சமான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு அனைத்துத்தரப்பினரும் இணங்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எதிர்காலத்தொடர்புகள் ஜனநாயகக்கூறுகளின் அடிப்படையில் தங்கியிருக்கின்றன எனவும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தேர்தல்களை நடத்துவதற்கு இடமளித்தல் உள்ளிட்ட ஜனநாயகக்கூறுகள் நாட்டை வலுப்படுத்தும் என்றும் அமெரிக்கத்தூதுவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய ரியர் அட்மிரல் பீற்றர் ஏ.குமடாட்டா, இந்தோ – பசுபிக் செயற்திட்டத்தின் நோக்கம், சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம், இவ்விடயத்தில் அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியமைக்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து ‘இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான பகிரப்பட்ட இலக்கு: தெற்காசியப்பிராந்தியம் மீதான தாக்கங்கள்’ என்ற நூலின் இதழாசிரியர் கலாநிதி ஹரிந்திர விதானகே அந்நூலின் உள்ளடக்கம் தொடர்பாக சுருக்கமாக விளக்கமளித்ததுடன், அதன் பின்னர் அந்நூலின் வெளியீடும், அதில் அதிதிகளின் கைச்சாத்திடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.