கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த அவுஸ்திரேலியாவிடமிருந்து நிதியுதவி
பதுளை, இரத்தினபுரி , மட்டக்களப்பு, களுபோவில, தங்காலை வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த ஆஸ்திரேலியாவிடமிருந்து 99.42 மில்லியன் ரூபா நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் ‘அனைவருக்கும் பார்வை’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைனளில் கண் சிகிச்சை அலகுகளுக்கு மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கும் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறன் விருத்திக்கு உதவி வழங்குவதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பதுளை மாகாண பொது வைத்தியசாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் களுபோவில போன்ற போதனா வைத்தியசாலைகள் மற்றும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்குத் தேவையான நவீன வசதிகளைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கண் சிகிச்சை அலகுகளில் கண் சுகாதார ஊழியர்களின் திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்கும் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் 99.42 மில்லியன் ரூபா கிடைக்கப் பெறவுள்ளது.
அதற்கமைய, உத்தேசிக்கப்பட்டுள்ள வழங்கலைப் பெற்றுக் கொள்வதற்காக ஆஸ்திரேலியாவின் ‘அனைவருக்கும் பார்வை’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்கும் இடையிலான உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை