அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – பெப்ரல்
தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்குமாறு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று அனுமதிக்கப்படவேண்டும்.
அத்துடன் நாடாளுமன்ற அதிகாரத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராஹேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குத் தேவையான பணத்தை நாடாளுமன்றத்தால் விடுவிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பாகக் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்குமாறு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று அனுமதிக்கப்படவேண்டும்.
நிதி அமைச்சர் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, அந்தப் பணத்தை விடுவிப்பதைத் தாமதித்து வருகின்றமையால் இந்த பிரேரணையை நாடாளுமன்றம் அனுமதித்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தில் இருக்கும் அதிகமானவர்கள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து வருகின்றமையால் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்க வேண்டும் என்ற பிரேரணையை நாடாளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்வது கஷ்டமான விடயமாக இருக்காது என நம்புகிறோம்.
நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் நாட்டின் நிதி அதிகாரம் இருப்பது நாடாளுமன்றத்துக்காகும். அதனால் வரவு – செலவுத் திட்ட அறிக்கையின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாவை தேர்தலுக்காக விடுவிக்குமாறு தெரிவித்து பிரேரணை ஒன்றை அனுமதித்துக்கொள்ளுமாறு நாடாளுமன்றத்தை பிரநிதி நிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
அதேநேரம், நாடாளுமன்ற அதிகாரத்தை ஆக்கிரமிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை