ஜனநாயகத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – சரித ஹேரத்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்புக்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பி வைத்த கடிதத்தை சபாநாயகர் திறைசேரிக்கு அனுப்பி வைத்துள்ளார் என அறிய முடிகிறது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 2023 ஆம் ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் தேர்தலில் படுதோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் செலவுகளுக்கான நிதியை விடுவிக்காமல், தேர்தல் செயற்பாடுகளுக்குத் தடையேற்படுத்தியுள்ளார்.
நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. ஆகவே, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி விடுவிப்பு விடயத்தில் நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளது.
நிதி விடுவிப்பு விடயத்தில் தலையிடுமாறு ஆணைக்குழு அனுப்பி வைத்த கடிதத்தை சபாநாயகர் திறைச்சேரிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அறிய முடிகிறது. தேர்தல் நடவடிக்கைக்கு நிதி ஒதுக்க முடியாது என திறைச்சேரி உறுதியாக உள்ளபோது எவ்வாறு திறைசேரியிடமிருந்து நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் தொடர்பில் சபாநாயகர் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்துக்கு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். முன்னாள் சபாநாயகர்களான சமல் ராஜபக்ஷ, கருஜயசூரிய ஆகியோர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள்.
நாட்டு மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அடிப்படைச் சட்டங்கள் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டுள்ளது. தேர்தல் உரிமையைப் பாதுகாக்க நாடாளுமன்றம் துரிதமாகச் செயற்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உண்டு. ஆகவே சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை