மலையக தமிழ் சமூகத்தின் நல்வாழ்வில் பிரித்தானியாவுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது – மனோ கணேசன்
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக பிரதி பணிப்பாளர் மாயா சிவஞானத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸதானிகர் சாரா ஹல்டன் முன்னிலையில், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரித்தானிய இராஜதந்திரியை, கொழும்பில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில், சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, மலையக தமிழ் சமூகத்தின் வாய்ப்புகள், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் பரந்த அரசியல் தொடர்பாகக் குழு கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள மலையக தமிழ் சமூகத்தின் நல்வாழ்வில் பிரித்தானிய அரசாங்கத்துக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என இராஜதந்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து தென்னிந்தியத் தமிழர்களை இலங்கைக்குள் கொண்டு வரத் தொடங்கியதில் இருந்து பிரித்தானியப் பொறுப்பின் கூறு தொடங்குகிறது.
அன்றிலிருந்து அந்த மக்கள் கடின உழைப்பை மேற்கொண்டு அதிக லாபம் ஈட்டும் பெருந்தோட்ட ஏற்றுமதி தொழில், வீதிகள், தொடருந்து வலையமைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்தையும் அமைத்தனர். ஆனால் பதிலுக்கு, பெருந்தோட்டத் தமிழ் மக்களின்; குடியுரிமை மற்றும் வாக்குரிமை 1948 இல் பறிக்கப்பட்டன.
1964 இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டனர். அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது, பிரித்தானிய ஆளுநரின் கீழ் சிலோன் ஒரு டொமினியன் நாடாக இருந்தது, அது பிரிட்டிஷ் அரசிற்கு அறிக்கை அளித்தது.
எனினும் பிரித்தானியரால் முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசமைப்பின் 29 ஆவது பிரிவு பெருந்தோட்ட மக்களுக்கு உதவவில்லை. எனவே, இன்றைய பிரித்தானியாவின் அரசாங்கம் எமது சமூகத்தின் நல்வாழ்வுக்கான தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்ட சமூகம், முழு குடிமக்களாக இலங்கை தேசிய நீரோட்ட அரசியலில் மேலும் மேலும் வர விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் உள்ள மலையக தமிழ்ச் சமூகத்துக்கு உதவ பிரித்தானியா முன்வரவேண்டும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை