யாழ்.நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும் நகர அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தொகை செலவில் அமைக்கப்பட்ட வாகன தரிப்பிடம் இருக்கும் நிலையில் அதனை செயல்படுத்துவதற்கு பொலிசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம்,யாழ் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரப்படத்தில் மேலதிக வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிசாரின் உதவியை நாடியுள்ளோம்.
குறித்த வாகன தரிப்பிடத்தில் நீர் வசதிகள் மலசல கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தூர இடங்களில் இருந்து வருகை தரும் வாகனங்கள் தரித்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.
ஒரு மணித்தியாலத்திற்கு உட்பட்டு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதமான கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது .
அதற்கு மேலதிகமாக நிறுத்தப்படும் மணித்தியாலங்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிட எண்ணியுள்ள நிலையில் அதன் விவரங்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும்.
ஆகவே யாழ் நகரப் பகுதியில் வாகன நெரிசல்களை குறைப்பதற்கு பாதுகாப்பான வாகனத் தரிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்” என்றார்
கருத்துக்களேதுமில்லை