சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம் மாத இறுதியில் கைச்சாத்து – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர்
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒப்பந்தம் இந்த மாதம் இறுதியில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கிறோம். இந்த கடன் உதவி மூலம் நாட்டுக்கு பணம் கிடைப்பதுடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான வழிகளும் ஏற்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி இளைஞர் படையணி அங்குரார்ப்பண நிகழ்வு 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டும் என ரணில் விக்ரமசிங்க 2021இல் இருந்து தெரிவித்து வந்தார். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் அதனை தாமதித்து வந்ததாலே நெருக்கடி நிலை அதிகரித்தது.
எங்களுக்கு கடன் வழங்க நாடுகள் முன்வரவில்லை. நாங்கள் பெற்ற கடனை திருப்பிச்செலுத்தும் வரை எந்த வங்கியும் எமக்கு கடன் வழங்கவில்லை.
என்றாலும் தாமதித்தாவது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல முடிந்தமையாலே பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வழிகள் ஏற்பட்டிருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள தேவையான பேச்சுவார்த்தைகள் தற்போது நிறைவுக்கு வரும் நிலையில் இருக்கிறது.
இந்த மாதம் இறுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கிறோம். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் பணம் மாத்திரம் எமக்கு முக்கியமில்லை. அதனுடன் வேறு பண உதவிகளும் கிடைக்க இருக்கின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் பல் தரப்பு நிறுவனங்களிடமிருந்து எமக்கு பணம் கிடைக்க இருக்கிறது. அதேபோன்று எமது நாடு அவிருத்தி நோக்கிச்செல்லும் வரைபு இந்த ஒப்பந்தத்தில் இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வரமுடியுமான சூழல் ஏற்படுகிறது.
மேலும் கடந்த 7மாதங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலையை மக்கள் மறந்துள்ளனர். வரிசை யுகத்துக்கு எப்போது தீர்வுகிடைக்கும் என நினைத்துப்பார்க்க முடியாத நிலையே இருந்தது.
வைத்தியசாலைகளில் மருந்து இல்லை. 6மணித்தியாலத்துக்கும் அதிக நேர மின் துண்டிப்பு, எரிபொருள், எரிவாயு பெற்றுக்கொள்ள பல நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையே இருந்தது. இந்நிலையில் நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார நெருக்கடிக்கு திர்வுகாணும் வேலைத்திட்டம் காரணமாக தற்போது ஓரளவு நிலைமை சீரடைந்துள்ளபோதும் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார கஷ்டம் தீரவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துக்கு உடனடியாக செல்ல தவறியமையே இதற்கு காரணமாகும். என்றாலும் தற்போது நாடு தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர். ஆனால் பொரிளாதாரத்தை கட்டியெழுப்ப இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றார்.
கருத்துக்களேதுமில்லை